திமுக ஜெயிச்ச ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி எனப் பேச்சு... அமைச்சர் கருப்பணன் பதவியில் இருக்ககூடாது.. ஆளுநரிடம் திமுக புகார்!

By Asianet TamilFirst Published Jan 26, 2020, 9:54 PM IST
Highlights

“அமைச்சர் கருப்பணன் தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை அமைச்சர் மீறிவிட்டார். ஆட்சியின் மரபை மீறி நடந்துக்கொண்ட ஒருவர் இனியும் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது” துரைமுருகன் என வலியுறுத்தியுள்ளார்.
 

திமுக வெற்றி பெற்ற ஊராட்சிக்கு குறைந்த நிதியை ஒதுக்குவோம் என்று பேசிய அமைச்சர் கருப்பணனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் கருப்பணன், “சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்துள்ளது. தலைவர் பதவியை அவர்கள் பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும். தற்போது அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக வெற்றி பெற்றாலும், அவர்களால் திட்டப்பணியை முழுமையாக செய்ய முடியாது’’ என்று பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையானது.
இந்நிலையில் அமைச்சர் பேசிய விவகாரத்தை கையில் எடுத்துள்ள திமுக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. இதுகுறித்து திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக புகார் மனு ஒன்றை தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், “அமைச்சர் கருப்பணன் தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை அமைச்சர் மீறிவிட்டார். ஆட்சியின் மரபை மீறி நடந்துக்கொண்ட ஒருவர் இனியும் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது” துரைமுருகன் என வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அமைச்சர் பேசிய பேச்சு வெளியான பத்திரிகைகளின் நகல்களையும் புகார் கடிதத்தில் இணைத்து துரைமுருகன் அனுப்பியுள்ளார். 

click me!