#BREAKING ஜெட் வேகத்தில் கெத்து காட்டும் அதிமுக... விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 6:44 PM IST
Highlights

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்து ஓபிஎஸ் - இபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான காலஅவகாசம் குறைவாக இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, நேர்காணல், விருப்ப மனு தாக்கல் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் படுவேகமாக நடைபெற்று வருகிறது. திமுகவில் வரும் 10ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதிமுகவைப் பொறுத்தவரை விருப்ப மனு தாக்கல், நேர்காணல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். அதில் போடிநாயக்கனூரில் ஓபிஎஸ், எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டையில் தேன்மொழி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்து ஓபிஎஸ் - இபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொன்னையன், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. விரைவில் வெளியாக உள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், மக்கள் நல திட்டங்கள், கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 

click me!