ADMK : அதிமுக எம்.எல்.ஏ.வால் உயிருக்கு ஆபத்து.. திமுக பக்கம் சாய்ந்த பெண் கவுன்சிலர் வீடியோ வெளியிட்டு கதறல்.!

By Asianet TamilFirst Published Jan 25, 2022, 8:09 PM IST
Highlights

எனக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். அதனால்தான் ஆடியோ பதிவு தந்தோம். விருப்பப்பட்டு நான் தரவில்லை. சங்கீதாவும் விருப்பப்பட்டுதான் கையெழுத்திட்டார். எங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டுகிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.வால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அதிமுக பெண் கவுன்சிலர் வெளியிட்ட வீடியோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய தலைவராக இருந்தவர் ஜெகநாதன். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஒன்றிய குழு கூட்டத்தை கூட்ட திமுகவினர் கோரினர். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நீதிமன்றத்தில் தடை பெற்றார் ஜெகநாதன். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் அதிமுகவினர் அளித்த ஆவணங்கள் போலியானவை என்று நீதிமன்றத்தில் தெரிய வந்தது. இதனையடுத்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டத்தை நடத்த அனுமதி அளித்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 21 அன்று பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தனர். திமுக கவுன்சிலர்களோடு சேர்ந்து அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா ஆகிய பெண் கவுன்சிலர்களும் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து அதிமுகவுக்கு அதிர்ச்சியைத் தந்தனர். மேலும் அதிமுக தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவரும் ஈரோடு செல்லும் வழியில் குமாரபாளையத்தில் நள்ளிரவில் திமுகவைச் சேர்ந்த கும்பல் கடத்தியதாக அதிமுக எம்எல்ஏக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் இறங்கினர். 

கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பெண் கவுன்சிலர்களை கட்டாயப்படுத்தி அச்சமூட்டி திமுகவுக்கு ஆதரவாக கையெழுத்து பெற்றனர் என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர். அதுமட்டுமல்லாமல், பூங்கொடி, சங்கீதாவை மிரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து போட செய்ததாகப் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் அதிமுகவினர் அதிகளவில் பகிர்ந்தனர். இதற்கிடையே திடீர் திருப்பமாக, கவுன்சிலர் பூங்கொடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் விருப்பப்பட்டுதான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டேன். யாருடைய கட்டாயம், தூண்டுதலில் கையெழுத்து போடவில்லை.. எம்எல்ஏ ராஜமுத்துவும், அதிமுக ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் ஜெகநாதன் ஆகியோர்தான் என்னை ஆடியோ பதிவு தர சொல்லி ரொம்ப கட்டாயப்படுத்தினார்கள். எனக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். அதனால்தான் ஆடியோ பதிவு தந்தோம். விருப்பப்பட்டு நான் தரவில்லை. சங்கீதாவும் விருப்பப்பட்டுதான் கையெழுத்திட்டார். எங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டுகிறார்கள். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் வீட்டுக்கு அதிமுக எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் மிரட்டி எடுத்த ஆடியோவை வைத்துக்கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வீடியோவில் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

முதலில் திமுகவினர் கட்டாயப்படுத்தியதாக ஆடியோ பதிவு, பிறகு அதிமுகவினர் மிரட்டுவதாக வீடியோ பதிவு என அடுத்தடுத்து வந்திருப்பதால், இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரம் சேலம் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

click me!