
சென்னை: அதிமுக ஒரு சிங்கம், சிங்கிள்ளாக தான் வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரம், ஒரு பிரச்னை, ஒரு நயினார் என்று ஒரே வாரத்தில் அதிமுக, பாஜக கூட்டணி இப்போது பிளவுப்பட்டு நிற்கிறது. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அதிமுக, பாஜக கூட்டணியை உடைத்து தள்ளி இருக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி என்ற அறிவிப்பை அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருக்கிறார். இந்த தேர்தலில் தான் கூட்டணி இல்லை, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தொடரும் என்று டெல்லி மேலிடம் சொல்ல வேண்டியதை இப்போதே சொல்லி அதிரடி காட்டி இருக்கிறார்.
தனித்துப்போட்டி என்பது நேற்றைய தினமே பாஜக தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும் கடைசி நிமிடத்திலாவது ஏதேனும் மேஜிக் நடக்காதா என்றுதான் அண்ணாமலை தவிர்த்து கட்சியின் சீனியர்கள் காத்திருந்தனர்.
ஆனால் நேற்றிரவே கடலூர் மாநகராட்சி உள்ளிட்ட சில நகராட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதன் பின்னரே தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட பாஜக தயாரானதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக கூட்டணியில் இருந்து முதலில் பாமக, இப்போது பாஜக விலகி உள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்புக்கு நயினார் நாகேந்திரன் அதிமுகவின் ஆண்மை பற்றி பேசியது தான் காரணம் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இப்படி தொடரும் விமர்சனங்கள், பாஜகவின் தனித்து போட்டி என்ற அறிவிப்புக்கு இடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில கருத்துகளை கூறி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடனும் சீட் பங்கீடு சுமூகமாக தான் நடந்தது. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை அதிமுகவால் நிறைவேற்ற முடிய வில்லை. அதனால் தான் பாஜக தனித்து போட்டி என்று அறிவித்து இருக்கிறது. இது அவர்களின் கட்சி நலன் சார்ந்த ஒன்று.
நாங்கள் பெரிய கட்சி. எங்கள் கட்சியினுடைய தொண்டர்கள், அவர்களின் நலன்கள் கருதி தான் செயல்பட முடியும். 2024ம் ஆண்டு பார்லிமெண்ட் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக நீடிக்குமா என்பது இப்போது எதுவும் கூற முடியாது.
தேர்தல் வரும் சமயத்தில் அதிமுக தலைமை உரிய முடிவெடுத்து அதனை அறிவிக்கும். நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கு அவரே வருத்தமும், விளக்கமும் சொல்லிவிட்டார்.
கட்சி தரப்பிலும் உரிய விளக்கம் சொல்லியாகிவிட்டது. அதிமுக தரப்பில் இருந்து கண்டனங்களும், பதிலடியும் தரப்பட்டுவிட்டது. அதோடு இந்த விவகாரம் முடிந்துவிட்டது. கூட்டணி பிரிந்ததற்கும், இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜகவின் தனித்து போட்டி என்ற முடிவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலில் பங்குபெறலாம். யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பது தான் முக்கியம். தற்போது நடைபெறும் திமுக ஆட்சி கட்ட பஞ்சாயத்து, அடாவடி என அராஜகத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
இது ஒரு விளம்பர அரசாங்கம். அதிமுக ஒரு சிங்கம், சிங்கிளாக தான் வரும், மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.