
சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்த சேப்பாக்கம் தொகுதி வேட்பாளரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டு தற்போது சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளார் என அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தாயார் துர்கா ஸ்டாலின் இருவரும் ஸ்நோ அவுசிங்க் என்ற நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.
2008ஆம் ஆண்டு 11.62 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இந்நிறுவனத்தின் பெயரில் வீடு வாங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை துர்கா ஸ்டாலின் வசிக்க இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இங்குதான் ஸ்டாலின் தற்போது வசித்து வருவதாகவும், உதயநிதி ஸ்டாலினின் வருமானம் மிகவும் குறைவாக காட்டப்படுள்ள நிலையில் இந்த வீட்டை வாங்கியதற்கான வருமானம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான எவ்வித தகவலும் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், 2016 - 2017ம் ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் வருமானம் 4.12 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் 1.77 கோடி ரூபாய் மதிப்பில் உதயநிதி ஸ்டாலின் ரேஞ் ரோவர் என்ற சொகுசு காரை பிப்பிரவரி 29. 2016-ல் வாங்கியுள்ளார் என்றும் அ.தி.மு.க புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்நோ ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர், இருவரின் வேட்பு மனுவிலும் இந்த நிறுவனம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இயக்குநராக இருக்கும் இந்த நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் (Shell Companies) என்றும் இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் இருப்பதால் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.