திமுக கோட்டையில் பாஜக போடுமா ஓட்டை..? சீனியருக்கு சவால் விடும் ஜூனியர்..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2021, 3:36 PM IST
Highlights

சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் வினோஜ் செல்வம். இந்நிலையில் அவர் வெற்றிபெற பல வியூகங்களை வகுத்து வருகிறார். 
 

சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் வினோஜ் செல்வம். இந்நிலையில் அவர் வெற்றிபெற பல வியூகங்களை வகுத்து வருகிறார். 

சென்னை துறைமுகம் தொகுதி எப்போதும் விஐபிகள் களமிறங்கும் தொகுதி. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி. ஆனால், சென்னை மாவட்டத்திலேயே மிக குறைவான வாக்காளர்களைக் கொண்டது இந்தத் தொகுதி. இங்கு  இஸ்லாமியர்கள், மார்வாடிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் 1977 - 2006 வரை தொடர்ந்து 8 முறை திமுக மட்டுமே வென்றுள்ளது. 2011 தேர்தலில் அந்த சாதனையை தகர்த்தது அதிமுக. 

அப்போது பழ.கருப்பையா, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். திமுகவுக்கு எதிராக வீசிய தேர்தல் அலை துறைமுகத்தையும் புரட்டிப் போட்டது. பிறகு 2016-ல் மீண்டும் திமுக தொகுதியை கைப்பற்றியது. பி.கே.சேகர் பாபு இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ. இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் இத்தொகுதியை தங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ்.பி.செல்வம் இங்கு போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் சேகர் பாபுவே மீண்டும் களமிறங்குகிறார்.  இத்தொகுதியில் செல்வாக்கு உள்ள சேகர் பாபுவுக்கு, வினோஜ் செல்வம் பெரிய சவாலாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், இளைஞரான வினோஜ் செல்வம், தொகுதியில் பாஜகவின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார். இத்தொகுதியில் அதிக அளவில் முஸ்லீம்களும், மார்வாடிகளும் வசித்து வரும் சூழலில், முஸ்லீம் இளைஞர்களை டார்கெட் செய்வது தான் வினோஜின் வியூகம் என்கின்றனர். 

பாஜகவை வீழ்த்த எந்த அஸ்திரத்தை திமுக பயன்படுத்துகிறதோ, அதே அஸ்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான் வியூகம். இதற்கு, தானும் ஒரு இளைஞர் என்ற அந்தஸ்தே போதும் என்கிறார். துறைமுகம் தொகுதியில் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்களை சந்திக்கும் வினோஜ், 'நாமும் எல்லோரையும் போல பேசியதையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நாம் இளம் இரத்தங்கள். எது சரி, எது தவறு என்பதை பகுப்பாய்வு செய்து யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்ற ரீதியில் இயல்பாக பேசி தனக்கு ஆதரவாக செயல்பட வைக்கிறாராம்.

இதன் ஒருபகுதியாக, துறைமுகம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதிக்கு சென்ற வினோஜ் செல்வம், அங்கு ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று ஆதரவு கோரியிருக்கிறார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து, டீ கொடுத்து இஸ்லாமியர்கள் வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர். அப்போது. 'இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாஜக - அதிமுக கூட்டணி ஆதரவாக இருக்கும்' என்று கூறி வாக்கு சேகரித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் செல்வம், "திமுகவின் கோட்டை என்று கூறப்படும் துறைமுகம் தொகுதியில் 'பாஜக போட்ட ஓட்டை 'என்று தலைப்புச் செய்தி வரும்" என்று பேசி வருகிறார். ஆனாலும், சேகர் பாபுவை அவ்வளவு எளிதாக வினோஜ் செல்வம் வெற்றி பெறுவாரா? என்பது பெருத்த சந்தேகமே.

click me!