ஒரே நாளில் 3 ஆயிரம் பேர்... ஒவ்வொரு கிராமத்திலும் 200 ஓட்டுகளுக்கு குறி... வேலூரில் அதகளப்படுத்தும் அதிமுக!

By Asianet TamilFirst Published Jul 24, 2019, 9:36 AM IST
Highlights

வேலூரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 200 வாக்குகளைப் பெற வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்கேற்ப ஆகஸ்ட் 3-ம் தேதி வரை பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
 

வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே நாளில் அதிமுக நிர்வாகிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால், வேலூரில் திரும்பிய பக்கமெல்லாம் கரை வேட்டிகளாகக் காணப்படுகிறார்கள்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் உட்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக சார்பில் பிரமாண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வேலூரில் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கிவிட்டது. அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் வேலூரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து தேர்தல் பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.


சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த சனிக்கிழமைவரை நடைபெற்றதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் வேலூருக்கு உடனடியாக வரமுடியவில்லை. மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு அதிமுகவினர் வேலூருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வேலூருக்கு வந்திறங்கினர். வேலூரில் உள்ளூர் அமைச்சர் வீரமணி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் வேலூருக்கு வந்ததால், வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நேற்று இரவு நடைபெற்றது.


வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அமைச்சர்கள் பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 200 வாக்குகளைப் பெற வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்கேற்ப ஆகஸ்ட் 3-ம் தேதி வரை பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

click me!