தென் இந்தியாவுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜக … புதிய அரசை அமைக்கிறார் எடியூரப்பா !!

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 9:33 AM IST
Highlights

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் ஆட்சி செய்த பாஜக கடந்த ஆண்டு அதை இழந்த நிலையில் தற்போது, அங்கு காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசை கவிழ்த்ததன் மூலம் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. எடியூரப்பா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக  தரம்சிங் இருந்தார். 

ஆனால் ஜனதாதளம்(எஸ்) ஆதரவை வாபஸ் பெற்று, பா.ஜனதாவுடன் கைகோர்த்த  குமாரசாமி 2½ ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி பதவி காலம் முடிந்தும்  முதலமைச்ச்ர் பதவியை அவர் பாஜகவுக்கு  விட்டுக்கொடுக்க மறுத்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் முதலமைச்ச்ர் பதவியை  அவர் பா.ஜனதாவுக்கு விட்டு கொடுத்தார். 

அதைதொடர்ந்து எடியூரப்பா கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் முறையாக முதலமைச்சராக  பதவி ஏற்றார். ஆனால் 7 நாட்கள் மட்டுமே அவர் முதலமைச்சராக  இருந்தார். அவரது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

அதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக  அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து எடியூரப்பா 2-வது முறையாக முதலமைச்சரானார். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா ஆட்சி அமைத்தார்.

3½ ஆண்டுகள் முதலமைச்சராக  பதவியில் நீடித்த எடியூரப்பா மீது கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பா மீது கனிம சுரங்க முறைகேடு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து பாஜக  மேலிடம் உத்தரவின்பேரில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எடியூரப்பா பாஜகவில்  இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தனித்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. எடியூரப்பா கட்சியும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் சுமார் 10 சதவீத வாக்குகளை எடியூரப்பா கட்சி பெற்றது.

எடியூரப்பா தனித்து போட்டியிட்டதால் தான் பா.ஜனதா தோல்வியை தழுவியது என்ற கருத்து அக்கட்சியில் எழுந்தது. இதையடுத்து எடியூரப்பாவை மீண்டும் பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு அடுத்த சில மாதங்களில் எடியூரப்பா மீண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

கர்நாடக பா.ஜனதா தலைவராக இருந்த பிரகலாத்ஜோஷியின் பதவி காலம் முடிவடைந்த பிறகு அக்கட்சியின் மாநில தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிக இடங்களை கைப்பற்றி பெரிய கட்சியாக பாஜக விளங்கியதால், அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவுக்கு 2018-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி கவர்னர் முதலமைச்சராக  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மூன்றே நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் தற்போது 4-வது முறையாக எடியூரப்பா முதலமைச்சராகிறார். . நாளை அவர் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. 

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக  ஆட்சி நடக்கிறது. ஆனால் அக்கட்சிக்கு தென்மாநிலங்களில் ஆட்சி இல்லையே என்ற குறை இருந்தது. தற்போது அங்கு காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசை கவிழ்த்ததன் மூலம் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. எடியூரப்பா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

click me!