
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய வேட்பாளர்களுக்காக சூறாவளி வேகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கும் தங்களது தொகுதியில் ஒர்க் அவுட் ஆகும் விதத்தில் தினுசு, தினுசாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.பி. முதல் மாவட்ட செயலாளர்கள் வரை களத்தில் தீயாய் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இன்று சேலத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சேலத்தில் உள்ள சென்னீஸ் கேட்வே என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இன்று மாலை அங்கிருந்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட உள்ள எடப்பாடி தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பிரசாரத்திற்காக கரூர் புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் விடுதியில் தங்கியுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட சுற்றுப்பயண திட்டம், தேர்தல் பணிகள் ஆகியன குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.