தமிழினத்துக்கு எதிராக பாஜக அரசு பச்சை துரோகம்! கொந்தளிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்..

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2021, 10:41 AM IST
Highlights

தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்காமல்,  ஈழத்தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவை இந்தியா வழங்கியுள்ளது.

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை இனப்படுகொலை தொடர்பாக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெற்று வந்த விவாதங்களைத் தொடர்ந்து இன்று அது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 22 நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக- இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. 

பெரும்பாலான நாடுகள் ஆதரித்த காரணத்தால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு முழுமையான தீர்வைத் தந்துவிடாது என்றபோதிலும், இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து எழுப்பிய கோரிக்கையான "சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை நோக்கி" நகர்வதற்கு இது வழிவகுக்கும். அதுமட்டுமின்றி இலங்கை அரசைத் தொடர்ந்து சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருப்பதற்கும் இது உதவும். அந்த வகையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இலங்கை அரசு 'வெஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினல்' திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது. அதனால் இந்தியா தம்மைத்தான் ஆதரிக்கும் என்று இலங்கை அரசு கூறி வந்தது. ஊடகங்களிலும் இது தொடர்பான யூகங்கள் வெளியாகி வந்தன. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்று பாஜக அரசு எடுத்த நிலைப்பாடு அமைந்துள்ளது. அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழர் நலனை பாஜக அரசு பணயம் வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 

ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தொடங்கியபோதே இந்திய அரசு இந்த கூட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தினோம்.  தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்காமல்,  ஈழத்தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவை இந்தியா வழங்கியுள்ளது. 

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததற்காக இலங்கை  வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். பாஜக அரசு இலங்கையைத்தான் ஆதரித்தது என்பதற்கு இதுவே தெளிவான சான்றாகும். பாஜக செய்துள்ள இந்த பச்சைத் துரோகத்துக்கு தமிழக மக்கள், பாஜகவுக்கும் அதன்கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக ஆகியவற்றுக்கும் சரியான பாடத்தை இந்தத் தேர்தலில் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

 

click me!