
அதிமுகவை அழிக்கும் அளவுக்கான தைரியத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்ததே பதவி ஆசை பிடித்த அதிமுகவினர் தான் என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் குற்றம் சாட்டியுள்ளார். அப்படிப்பட்ட பதவி ஆசை பிடித்தவர்களை களை எடுக்க வேண்டும் எனவும் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை பிரதமர் மோடியும் பாஜக தலைமையும் தான் இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஆட்சியாளர்கள் அந்த கருத்தை மறுத்தாலும் ஆளுநர் பதவியேற்பு விழா, டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் காவி நிறம் மிளிர்ந்து மின்னியது பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதை காட்டியது.
இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஆட்சிக்கு பிரச்னை வந்தால் மோடி பார்த்துக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் ஆதங்கமாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த அதிமுக ஆண்டு விழாவில் பேசிய ஏ.கே.போஸ், அதிமுகவை அழிக்கும் தைரியத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்ததே பதவி ஆசை பிடித்த அதிமுகவினர் தான் என தெரிவித்தார். கட்சியின் நலன் கருதி பதவி ஆசை பிடித்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவர்களாகவே கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களைக் கண்டுபிடித்து களை எடுக்க வேண்டும் என ஆதங்கமாக பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏ ஒருவரே அமைச்சர்கள் மீதான தனது அதிருப்தியை கொட்டித் தீர்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.