
ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர்தான் கொலை செய்தார்கள் என கடந்த வாரம் திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று பழனி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா நோய் தொற்றால் மரணமடைந்தார் எனக் கூறி தொண்டர்களை குழப்பிவிட்டார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அது குறித்து தமிழக அமைச்சர்கள் பலர் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் இட்லி சாப்பிட்டார்… சட்னி சாப்பிட்டார் என அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் முன்னாள் அமைச்சர் பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி மற்றும் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அனைவருமே தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர். இது குறித்து கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் கூறியது அனைத்தும் பொய் என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். சசிகலா குடும்பத்தினர் என்ன சொன்னார்களோ இதையே நாங்களும் கூறினோம் என பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கடந்த வாரம் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், மருத்துமனையில் வைத்து ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்தினர்தான் கொலை செய்துவிட்டார்கள் என கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார்.
இந்நிலையில் நேற்று பழனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், ஜெயலலிதா நோய் தொற்று காரணமாக மரணமடைந்ததாக குறிப்பிட்டார்.
அடிக்கடி டங்க் ஸ்லிப் ஆகி மாற்றி, மாற்றி திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருவது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர் சீனிவாசன் இப்படி மாற்றி, மாற்றி பேசுவதால் எது உண்மை, எது பொய் என தெரியாமல் தொண்டர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.