சசிகலா வெளியே வரட்டும்... அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியெல்லாம் காலி... அமமுக நிர்வாகி சரவெடி..!

By Asianet TamilFirst Published Jul 9, 2020, 9:02 PM IST
Highlights

 சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பிறகு அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை. 

சசிகலா விடுதலையாகி வெளியே வரும்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
அமமுக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். “மன்னார்குடியில் பைங்காநாடு, காரிகோட்டை ஆகிய ஊராட்சிகளில் அமமுகவை சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளனர். இந்த இரு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்து, ஒன்றியக்குழு உறுப்பினர் மூலம் பல்வேறு பணிகளை செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறந்தள்ளிவிட்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபடுகிறது. இதைக் கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஒன்றிய அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளோம்.
இந்தப் போராட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லையென்றால் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். உண்மையில் ஆளுங்கட்சிக்கு தெம்பு இருந்தால் திமுகவை சேர்ந்தவர் ஊராட்சி தலைவராக உள்ள ஊராட்சிகளில் இப்படி செய்து பாருங்கள். இந்த விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதனால்தான் அதிமுகவின் இந்த ஜனநாயக விரோத செயல்களை திமுக வேடிக்கை பார்க்கிறது. அமமுகவை விட்டு ஒருசிலர் சென்றிருக்கலாம். அதனால், கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அமமுக தற்போதும் பலமான கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. இனிவரும் தேர்தல்களில் அமமுக தன்னுடைய பலத்தை நிரூபிக்கும்.
சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது பற்றி வழக்கறிஞர் தெளிவாக விளக்கியுள்ளார். இதில் ஊகத்துக்கே இடமில்லை. சட்ட நடைமுறைகளின்படி பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விரைவில் விடுதலை ஆவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பிறகு அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை. சசிகலா விடுதலையாகி வெளியே வரும்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எல்லாம் காணாமல் போய்விடும்.” என்று ரெங்கசாமி தெரிவித்தார்.

click me!