
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பைக் கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும்.
ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க.தான் காரணம் என்றும், பிரச்சினை என்றால் பிறர் மீது பழி போடுவதும் தி.மு.க.விற்கு வாடிக்கையாகிவிட்டது. தற்போது நிலக்கரி பிரச்சினையில் மத்திய அரசு மீது தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும், இதற்குக் காரணம் ஒடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது.
இதன் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதன் விளைவாகவும் ஏற்பட்டுள்ள மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாகவும் பல இடங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம், அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள எரிசக்தித்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் மின் தேவை 17,300 மெகாவாட். இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும் ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது என்றும், பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
அதாவது, சொத்து வரி உயர்விற்குக் காரணம் மத்திய அரசு தான் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எப்படி சொன்னாரோ, அதே பாணியில், மின் தடைக்குக் காரணம் மத்திய அரசு என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டார் அமைச்சர். அதாவது, மின் தடை பெரிய அளவில் ஏற்பட்டால் அதற்குக் காரணம் மத்திய அரசு என்பதுதான் இதன் பொருள். இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து பிறர் மீது பழி போடுவதோ அல்லது அதற்கான காரணத்தைக் கூறுவதோ கண்டனத்திற்குரியது.எனவே முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளுவதாக அவர் தெரிவித்துள்ளார்.