
ஜெயலலிதா மறைவதற்கு முன்பும் சரி.. அவர் மறைந்த பின்பும் அண்மைக்காலம் வரை.. அதிமுக ஆட்சிக் காலத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஆரம்பித்து, நிறுவப்படும் அனைத்தும் பச்சை நிறமாகவே இருக்கும். கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான பேனர், விழா மேடை அமைப்பின் நிறம் என்னனு பார்த்தா பச்சையாகத்தான் இருக்கும்.
ஆனால், திடீரென டெங்கு ஒழிப்பு தின பேனர்களும் போஸ்டர்களும் காவி நிறத்தில் இருந்தன. ஒட்டுமொத்த அதிமுகவும் பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதோ என்ற எண்ணத்தை சாமானியர்களின் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் காவிமயமான பேனர் இருந்தது. சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக காவி பேனர் விவகாரம் இருந்து வருகிறது.
இதையடுத்து இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், அது காவி நிறம் அல்ல.. சிவப்பு நிறம்.. கோளாறு நிறத்தில் அல்ல.. பார்த்தவர்களின் கண்களில் தான் கோளாறு என விளக்கம் அளித்தார்.
ஒருவேளை அமைச்சர் கூறியது சரிதான்னு வச்சுக்குவோம்.. டெங்கு டேஞ்சர்னு காட்டுறதுக்காக காவி நிறம் போடப்பட்டதாவே இருக்கட்டும்..(அய்யய்யோ மாத்தி சொல்லிட்டேன்.. காவி இல்ல.. அமைச்சரின் கூற்றுப்படி சிவப்பு) இன்று நடந்த ஆளுநர் பதவியேற்பு விழாவில், ஆளுநர் மாளிகைக்குள் செல்லும் கார் பாஸிலிருந்து உட்காரும் நாற்காலிகள், விழா மேடை என அனைத்துமே ஒரே காவிமயம்தான்.. ஆளுநர் பதவியேற்பு விழாவை காவி ஆக்கிரமித்திருந்ததன் பின்னணி என்ன?
பச்சையை அடையாளமாகக் கொண்ட கட்சியின் ஆட்சிக்காலத்தில் காவி ”பளிச்”சுனு மின்னுவதன் பின்னணி என்னனு தெரியலயேனு கேட்டால்.. அதற்கும், அது காவி அல்ல.. சிவப்புதான் என அமைச்சர் பதில் அளிக்கக்கூடும்.
சரி அப்படியே சிவப்பு என வைத்துக்கொள்வோம்.. திடீரென பச்சையிலிருந்து சிவப்பிற்கு மாற என்ன காரணம்? என்பதையாவது கூறவேண்டுமல்லவா?
கலர்ல என்னங்க இருக்கு? அது ஒரு பிரச்னையா? என நினைக்கலாம்.. ஆனால் காவி பேனர் தொடர்பான கேள்விக்கு அமைச்சர், கலர்ல என்னங்க இருக்கு? அது ஒரு பிரச்னையா? என பதிலளித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதனாலும் அதன்பிறகு நடந்த ஆளுநர் பதவியேற்பு விழாவில் காவி மிளிர்ந்து ஒளிர்ந்ததும் தான் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்புகிறது.
டெங்கு பேனரில் காவியைக் கண்டது பார்த்தவர்களின் கண்களின் கோளாறு என்றால், ஆளுநர் பதவியேற்பு விழாவில் காவியைக் கண்டது யார் கோளாறு?
பார்த்தவர்களின் கோளாறா? அல்லது பார்ப்பவர்களின் கண்களுக்கு காவியாக தெரியுமளவிற்கு அவற்றை வைத்தவர்களின் கோளாறா?