பலவித நிபந்தனைகளுடன் பரோல்! சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் தடபுடல்!

 
Published : Oct 06, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
பலவித நிபந்தனைகளுடன் பரோல்! சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் தடபுடல்!

சுருக்கம்

banners posters inviting sasikala who visit chennai today on parole

ஊரெங்கும் போஸ்டர்கள். திரும்பிய பக்கமெல்லாம் சசிகலா படங்கள். அங்கங்கே பேனர்கள். எல்லாம் எதற்கா?  

பெங்களூரு சிறையில் இருந்து பதினெட்டு நிபந்தனைகளுடன் பரோலில் சென்னைக்கு வரும் சசிகலாவை வரவேற்றுத்தான் இத்தனை தடபுடல்! தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் கட்சித் தொண்டர்கள் வரத் தொடங்கிவிட்டனர். அதற்குக் காரணம், ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கொடுக்கப்பட்ட உத்தரவுதான்! சசிகலா பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட ஒரு வாய்ப்பாக இதனை தினகரன் திட்டமிட்டிருப்பது கண்கூடு!

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. அவரைப் பார்க்க  வேண்டும் என்பதற்காக பதினைந்து நாட்கள் பரோலில் விடுமாறு பெங்களூரு சிறைத்துறையில் விண்ணப்பித்தார் சசிகலா. கடந்த 3 ஆம் தேதி விண்ணப்பித்த மனு, பல வித நெருக்கடிகள், விசாரணைகளைக் கடந்து, பரிசீலனைக்குப் பின், இன்று ஓகே ஆகியிருக்கிறது. 

ஆனால், பதினைந்து நாள் பரோல் என்பது ஐந்து நாட்களாகக் குறைந்து, பலவிதமான நிபந்தனைகளுடன் சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. 

அரசியல் நடவடிக்கை இருக்கக் கூடாது, தலைவர்களைச் சந்திக்கக் கூடாது,  அரசியல் துறை தொடர்புடைய எவரையும் பார்த்து பேசக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் ஏதோ ஒருபக்கம் இருப்பது போல் தான் சென்னையில் நடவடிக்கைகள் தூள் பறக்கின்றன. இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கும் சசிகலாவை வரவேற்க ஒரு பெரும் படையே காத்திருக்கிறது. ஊரெங்கும் வரவேற்பு தெரிவித்து போஸ்டர்கள் தூள் பறக்கின்றன. சென்னை வரும் சசிகலா, தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லத்தில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் பேனர்கள் முளைத்துள்ளன. 

தினகரன், இளவரசி மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா, ராஜராஜன் என குடும்பத்தார்  சசிகலாவை சந்தித்துப் பேசிய நிலையில்,  விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு  சென்னைக்கு வரும் சசிகலாவை வரவேற்க கட்சியினர் பெருமளவில் குவிந்து வருகின்றனர். அவரை வரவேற்க கட்சியினர் வரவேண்டும் என்று அதிமுக., அம்மா அணி சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாம். 

இதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கார்களில் சென்னை விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவை அழைத்து வர பெங்களூருக்கே சென்ற தினகரன், அங்கிருந்த படியே, அனைத்து வேலைகளையும் கச்சிதமாகச் செய்து வருகிறார். எப்படியும் ஆளும் தரப்புக்கு நெருக்கடிகொடுக்கவும், அமைச்சர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும், அரசியல் புயலைக் கிளப்பவும் ஒரு வாய்ப்பாக சசிகலாவின் குறுகிய வருகையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..