
தின்னப்பன் மேக்க பார்த்த திசையில ஆடுங்கள ஒழுக்கமா மேய்ச்சுட்டு போயிட்டே இருப்பான். திடீர்னு ஏதாச்சும் ஒரு ஆடு மட்டும் குறுக்கால பாய்ஞ்சா அதப்பார்த்து அம்புட்டு ஆடுகளும் இங்கிட்டும் அங்கிட்டுமா பாய்ஞ்சு காரியத்த கெடுத்துப்புடும்...
கிட்டத்தட்ட இதே கதைதான் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கிறது. தினகரன் பன்னீர் பக்கமும், திவாகரன் பழனிச்சாமி பக்கமும், பழனிச்சாமி பன்னீர் பக்கமும், தினகரன் திவாகரன் பக்கமுமாக மாறி மாறி பேசி எப்படியாவது குழப்ப பிளவுகளை பசைபோட்டு ஒட்டிட முடியாதா என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த சீரியஸ்னஸ் புரியாத சில சில்லுவண்டுகள் போஸ்டரடித்தும், வாட்ஸ் அப்பில் வம்பிழுத்க்தும், சேனல் பேட்டிகளில் சிலுப்பியுமாக இணைப்புக்கு ஆப்படிப்பதால் மீண்டும் சேரும் முயற்சியில் மேலும் மேலும் பள்ளம் விழுந்து கொண்டே இருக்கிறது...
இப்படித்தான் காஞ்சிபுரத்தின் முன்னாள் நகர செயலாலர் புல்லட் பரிமளம் என்பவர் ஒட்டியிருக்கும் போஸ்டர், இணைப்பு மேளாவுக்கு ஊஊஊஊ....என தன் பங்கிற்கு சங்கு ஊதியிருக்கிறது.
அப்படி என்னதான் போஸ்டரில் பொரிந்திருக்கிறார் புல்லட்டு?...
‘’மிக விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கயிருக்கும் அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இனி எதிலும் வெற்றி ஜெயம்” என்று கொட்டை எழுத்துக்களில் கொட்டடித்திருக்கிறார்.
அத்தோடு விட்டாரா?...’’அண்ணன் அவர்களால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டு நிதியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டவரே அண்ணன் தினகரனுக்கு எதிராக பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொள்.” என்று அமைச்சர் ஜெயக்குமாரை ஏக வசனத்தில் போட்டு பிளந்திருக்கிறார். துரோகி என்றும் சொல்லி குத்தியிருக்கிறார். கூடவே “ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று போஸ்டர் அடிக்கப்பட்டதினால் அம்மா அவர்களால் சபாநாயகர் பதவியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவருக்கு, நிதியமைச்சர் பதவி என்பது அண்ணன் டி.டி.வி.தினகரன் கொடுத்த பிச்சைதான்.
எனவே அண்ணனிடம் மன்னிப்பு கேள், ஒன்றரை கோடி தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்! எச்சரிக்கை” என்று ஏகவசனத்தில் எக்கச்சக்க தப்புகளில் ஒரு சீரான வரிகள் அமைப்பு இல்லாமல் போஸ்டரடித்து ஒட்டியிருக்கிறார்.
விஜயகாந்த் பேச்சு போல் இருக்கும் இதை நாமே வாசித்து குத்துமதிப்பாக ஒரு அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் துரோகி, மன்னிப்பு கேள், பிச்சை என்றெல்லாம் புல்லட்டு விளாசியிருப்பது ஜெயக்குமாரை கடுப்பில் கதறவிட்டிருக்கிறது.
தினகரனுக்கு ஆதரவாக இப்படியொரு தடாலடி போஸ்டரை ஒட்டியது மட்டுமில்லாமல் அதில் டாக்டர் வெங்கடேஷின் போட்டோவையும், பெயரையும் வேறு கோர்த்து விட்டிருக்கிறார்.
போஸ்டர் வடிவில் பரிமளம் ஓட்டிய புல்லட் தாறுமாறாக கட்சிக்குள் கடுப்பை கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம் எடப்பாடி அணியை மட்டுமல்ல பன்னீர் அணியையும் சூடாக்கியிருக்கிறதாம். ஏற்கனவே சசியையும், தினகரனையும் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாமல் இரு அணிகளும் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில் மூன்று நான்கு நாட்களாக திவாகரன் வேறு களமிறங்கிவிட்டார். போதாக்குறைக்கு டாக்டர் வெங்கடேஷை வேறு இப்படி உள்ளே இழுத்துவிடுறாங்களே! என்று அவர்களின் கவலை.
ஆனால் தினகரன் மற்றும் திவாகரனுக்கோ...எப்படியாவது சமாதானம் செய்து இரண்டு அணிகளில் ஒன்றை தங்களுக்கு சாதகமாக்கி தங்களை வலுவாக்கலாமென்றால் இப்படி இந்த மங்குனி நிர்வாகிகள் மசத்தனமாக போஸ்டரடித்து போட்டு எறிகிறார்களே என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் கதற வைத்திருக்கிறது காஞ்சிபுரம் புல்லட்டின் போஸ்டர்.