
’தளபதி முதல்வரானால் அவரது தளபதிகள் யார்?’_ தி.மு.க.வுக்குள் டாப் கியருக்கு மாறியிருக்கிறது இந்த பரபர ரேஸ்!
அண்ணாதுரையிடம் அரசியல் பயின்ற கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் கழக நிர்வாகத்தில் ஜனநாயகம் பாராட்டினார்கள். என்னதான் கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தாலும் கூட பேராசிரியர் அன்பழகன், கே.பி.கந்தசாமி, நாஞ்சில் மனோகரன், ஆற்காட்டார் உள்ளிட்டோருக்கு பேச்சு, அதிகார சுதந்திரங்களை பகிர்ந்தளித்தார். அதன்பிறகு துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி என்று அடுத்த தலைமுறையை தன் தளபதிகளாக உருவாக்கி அரசியல் செய்தார். கட்சியில் மட்டுமில்லை ஆட்சியிலும் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டன.
அதேபோல் எம்.ஜி.ஆர். என்னதான் அ.தி.மு.க.வை நிறுவன தலைவராக இருந்தாலும் கூட நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, எஸ்.டி.சோமசுந்தரம் என்று தனக்கென ஒரு நிர்வாக படையை உருவாக்கினார். ஆட்சியிலும் அவர்களின் பங்கு இருந்தது. ஆனால் ஜெயலலிதா காலத்தில் கழகம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் நிர்வாகிகளின் பங்கும், அவர்களுக்கான ஜனநாயக உரிமையும் எந்தளவுக்கு இருந்தது என்பது நாம் விளக்கி நீங்கள் அறியவேண்டியது இல்லை.
தி.மு.க.வில் ஸ்டாலின் வெகுவாக தலையெடுத்த பிறகும் கூட , கருணாநிதியுடன் அவரது குடும்பம் சாராத ஆனால் கழகத்தின் நிர்வாக நிலைகளில் உள்ளோர் சிலர் அதிக நெருக்கமாகவே வலம் வருவர். கழக விழாக்களில் கலந்து கொள்ளும்போதும் துரைமுருகன், வீரபாண்டியார், பொன்முடி, ஆ.ராசா, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிசாமி, என்.கே.கே.பெரியசாமி என்று அந்தந்த மண்டலத்து முக்கியஸ்தர்களின் தோள்களை பிடித்தபடியே மேடையேறி வருவார்.
இந்த செயலினால் பல நன்மைகள் உண்டு. ஒன்று! கருணாநிதியின் நடை பாரம் குறையும், இரண்டு! ஒரு நிர்வாகியின் தோளில் தான் கைவைத்து செல்வதன் மூலம் அந்த நிர்வாகிக்கு தலைமை மற்றும் கழகத்தின் மீதான பற்று அதிகரிக்கும், மூன்று! எந்த மாவட்டத்தில் எந்த நிர்வாகியின் தோளில் இவர் கைவைத்து வருகிறாரோ அந்த மாவட்ட தொண்டர்களுக்கு அந்த நிர்வாகியின் மீது பயமும், மரியாதையும் அதிகரிக்கும். இதெல்லாம் இந்த தேசத்தின் பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி பால்யத்திலேயே கண்டறிந்த அரசியல் சூத்திரங்கள்.
ஆக இப்படி வளர்ந்ததுதான் தி.மு.க. அப்பேர்ப்பட்ட தி.மு.க. இன்று ஸ்டாலினை நம்பி நிற்கிறது. செயல்தலைவராக அறிவிக்கப்பட்டுவிட்ட ஸ்டாலின் தலைவர் பொறுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கூடவே முதல்வர் பதவியும் அவரை நோக்கி வர எத்தனிக்கிறது என்கிறார்கள்.
ஸ்டாலினின் உச்ச ஜாதக பல்ஸை பக்காவாய் பிடித்துப் பார்த்துவிட்ட தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகள் இப்போது ஸ்டாலினை நோக்கி முண்டியடித்து மூவ் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் சமீபத்திய தனியார் சேனல் சர்வே முடிவானது இவர்களின் ஆர்வத்தை மிகவும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஸ்டாலினை நெருங்கி முன்னேறுபவர்களில் மிக முக்கியமானவர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோர் முதல் வரிசையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு தன் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் துரைமுருகன்.
கருணாநிதியோடு நீண்ட நெடுங்காலமாய் பரபர அரசியலில் பல அங்கீகாரங்களுடன் பயணப்பட்டுவிட்ட இவர் இளைஞர்களுக்கு ஆசீர்வதித்து வழிவிட வேண்டிய நாள் எப்போதோ வந்துவிட்டது. ஆனால் இன்னமும் ஒட்டிக் கொண்டே இருக்கிறார். கருணாநிதியின் உடல்நிலை திடமாக இருந்தபோது கழகத்தில் ஸ்டாலின் எழுந்து வருவதை விரும்பாத முக்கிய தலைகளில் துரைமுருகனும் ஒருவராய்தான் இருந்தார்.
ஆனால் கருணாநிதி தளர்ந்த பின் தன் நிலையை அடியோடு மாற்றிக் கொண்டு ஸ்டாலினுக்கு சாமரம் வீச துவங்கிவிட்டார். ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டபோது தலைவருக்கு பிறகு தலைவரின் மகனான தளபதிதான் கட்சியை காப்பாற முடியும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். நானும் அந்த தொண்டர்களில் ஒருவன் தானே! என்று அதை நியாயப்படுத்தினார். ஸ்டாலின் செயல் தலைவராக அவதாரம் எடுத்த நாளன்று அறிவாலய மேடையில் இவர் விட்ட கண்ணீரில் அண்ணாசாலையே அமிழ்ந்து போனது. இவரை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் ரசிக்கிறாரோ இல்லையோ ஆனால் இவரது அரசியல் மற்றும் சட்டமன்ற ஞானம் ஸ்டாலினின் வளர்ச்சிக்கு தேவை.
இவர்களையெல்லாம் தாண்டி ஸ்டாலின் தானே விரும்பி ஒரு பட்டாளத்தை தன் அருகில் வளைய வர வைத்திருக்கிறார். அவர்களில் முதன்மையானவர்கள் சென்னையின் மாஜி மேயர் ம.சுப்பிரமணியம், திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வும் இளைஞரணி மாநில துணை அமைப்பாளருமான மகேஷ்பொய்யாமொழி இருவரும். ஐ.பெரியசாமியின் மகனான செந்திலும் ஸ்டாலினின் மனம் கவர்ந்தவரே. இவர்கள் போக கழகத்தின் சார்பு அணிகளிலேயே ஸ்டாலினின் மிகவும் மனம் கவர்ந்த அணியான ‘மருத்துவ அணி’யின் மாநில நிர்வாகிகளான டாக்டர் பூங்கோதை, டாக்டர் கோகுல், டாக்டர் கனிமொழி ஆகியோர்தான். ஸ்டாலின் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் டீம் இது.
இவர்கள் போக கரைவேஷ்டியை கட்டாமல் சதா சர்வகாலமும் ஸ்டாலினை கண்கொத்தி பாம்பாக கவனித்து அவரது ப்ரமோஷன்களுக்காக ஆவன செய்யும் அவரது செல்ல மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனும் ஸ்டாலினின் மனம் கவர்ந்த செயல் புயல்தான்.
இவர்கள் போக தமிழகம் முழுக்க இருக்கும் மாவட்ட செயலாளர்களில் வெகு சிலரும் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கிறார்கள்.
இவர்கள்தான் ஸ்டாலின் ஒருவேளை முதல்வரானால் ஆட்சியில் அவரது தளபதிகளாகவும், தளகர்த்தர்களாகவும் வலம் வர வாய்ப்பிருக்கிறது என்கிறது தி.மு.க.வை மிக துல்லியமாக வாட்ச் செய்யும் அறிவாலய பட்சி ஒன்று.
படை ரெடி, தேர்தல் போர் எப்போது!