
ஆட்சியில் அமர திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.,வும் தினகரனின் தீவிர விசுவாசியான தங்கதமிழ்செல்வன் கூறினார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் வந்த எம்.எல்.ஏ தங்கதமிழ்ச் செல்வன் , மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக அம்மா அணியை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்தோம். அதில் எந்த தவறும் இல்லை. 122 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக தான். பிரிந்து சென்ற அனைவரும் விரைவில் எங்களுடன் இணைவார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்குமா? என்பது பற்றி என்னால் இப்போது சொல்ல முடியாது. முதலில் வேட்பாளரை அறிவிக்கட்டும் பின்னர் அதுபற்றி பார்ப்போம் என்றார்.
மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எங்களிடம் ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம். ஆதரவு யாருக்கு என்பதை பொதுச் செயலாளர் சின்னம்மா சசிகலா தான் முடிவு செய்வார். ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் இந்த ஆட்சியை பினாமி ஆட்சி என விரக்தியில் பேசிவருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியில் அமர துடிக்கிறார் ஸ்டாலின். முதல்வராகும் விரக்தியில் பேசும் அவரது கனவு எல்லாம் ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.