
மலேசிய அரசு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சுமார் 16 மணிநேரங்கள் விமான நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மலேசியாவுக்கே, வைகோ ஆபத்தானவர் என கூறி இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட்டனர்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள். இந்த நிலையில், மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினை சகோதரர் என குறிப்பிட்டார்.
இதுகுறித்து வைகோ கூறியதாவது;
தம்மை மலேசியாவிற்குள் அனுமதிக்காததை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த செய்தியை கேட்டு எனக்கு மிகவும் மகிழ்சசியாக இருக்கின்றது. எதிலும் ஒரு நன்மை உண்டு. நான் ஒன்றும் பெரிதாகப் பத்து மாதங்களோ ஓராண்டோ சிறையில் இருக்கவில்லை. ஒரு 16 மணி நேரம உட்கார வைத்து இருந்தார்கள். ஆனால் அதற்காகத் தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கினறேன், I extend my thanks to all the leaders of Tamilnadu.
அஇஅதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்கள் அவைத்துணைத்தலைவர் மு.தம்பிதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா, தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் அண்ணன்பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் இப்படிப் பல தலைவர்கள் என்னை இதுபோன்று நடத்தியது முறையில்லை என்று கண்டித்து அறிக்கை கொடுத்தற்கு அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.