
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா - ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்படுகின்றன. முன்னதாக சசிகலா தலைமையில் செயல்பட விரும்பாத அதிமுகவினர் பலர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து தீபா தனி கட்சி துவங்குவதாக அறிவித்தார். அவரது ஆதரவளர்கள், மாநிலம் முழுவதும் பேரவை தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கான இடை தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைதொடர்ந்து அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளனர்.
ஆனால், தீபா தரப்பில் இதுவரை ஆலோசனை கூட்டம் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால், இதுவரை தேர்தலை சந்திப்பதற்கான வழிமுறைகளையோ, பிரச்சாரத்தையோ அவர் மேற்கொள்ளவில்லை.
இதனால், தீபா அணியில் இருந்து கூட்டம் கூட்டமாக, தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து சென்று கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயற்குழு உறுப்பினர் வாலாஜாபாத் ரஞ்சித்குமார், தலைமையில் ஏராளமானோர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஓ.பி.எஸ். அணியில் இணைத்து கொண்டனர்.