நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம்… கூட்டணி பற்றி அதிமுக, பாஜக ‘பளிச்’…

By manimegalai aFirst Published Sep 18, 2021, 9:43 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று இரண்டு கட்சிகளும் தெளிவுப்படுத்தி உள்ளன.

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று இரண்டு கட்சிகளும் தெளிவுப்படுத்தி உள்ளன.

 

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாய் களத்தில் இறங்க ஆரம்பித்துள்ளன. எப்படியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் திமுக களம் இறங்குகிறது. தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் இந்த தேர்தலை விடுவது போன்று தெரியவில்லை.

பாமகவும் உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்தபடி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் இந்த முடிவு முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந் நிலையில் கூட்டணியில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகள் எழ… கூட்டணியில் குழப்பம் இல்லை, அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.

சென்னையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக கூட்டணி பற்றி தெளிவுபடுத்தினார். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது என்ற அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக பாஜக கூட்டணி தொடர்கிறதா என்று பேட்டி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், பாமக தவிர்த்து மற்ற கட்சிகளுடனான கூட்டணி நீடிக்கிறது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!