ADMK - BJP : 30 சதவீத இடங்கள், 5 மேயர்கள்..! அதிமுக கூட்டணியில் பாஜகவின் டிமாண்ட்.. அதிமுக ரியாக்‌ஷன் என்ன.?

By Asianet TamilFirst Published Jan 29, 2022, 9:41 AM IST
Highlights

"பாஜகவுக்கு சட்டப்பேரவையில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அந்த மாவட்டங்களில் உள்ள நான்கு அல்லது ஐந்து மாநகராட்சிகளைப் பெற விரும்புகிறோம்."

பாஜக தனித்து போட்டி என்று தகவல்கள் உலா வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவீத இடங்களைக் கேட்க அக்கட்சி முடிவு செய்திருக்கிறது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன. அதிமுக கூட்டணியில் முக்கியமாக பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிமுக - பாஜக இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு கட்சிகளுமே வேட்பாளர்களை இறுதி செய்வதில் பிஸியாக உள்ளன. இதற்கிடையே, பாஜகவில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சியில் எழுந்தன. குறிப்பாக நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒருவர் கூட இல்லை” என்ற விமர்சனத்துக்குப் பிறகு, தனித்து போட்டி என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

கூட்டணி தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாஜக  தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக அவர்தான் முடிவு எடுப்பார்” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு பாஜக செல்லவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாகவும் கமலாயத்தில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கமலாய வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்கள் கேட்டு பேச்சுவார்த்தையை தொடங்கினோம். இந்த முறையும் அதையே செய்வோம். பாஜகவுக்கு சட்டப்பேரவையில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அந்த மாவட்டங்களில் உள்ள நான்கு அல்லது ஐந்து மாநகராட்சிகளைப் பெற விரும்புகிறோம். இதேபோல பாஜக வலுவாக உள்ள முக்கிய இடங்களையும் கேட்போம்” என்று தகவல்கள் கிடைத்தன. "கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பாஜகவுக்கு இடங்களை அதிமுக ஒதுக்கியது. எனவே, 10 சதவீதத்துக்கு மேல் பாஜகவுக்கு இடங்களை ஒதுக்க வாய்ப்பு குறைவுதான்” என்று அதிமுக தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக சென்னையில் பாஜகவின் தேர்தல் குழு நடத்திய ஆலோசனையில், அதிமுகவோடு கூட்டணியில் செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்த தலைவர்கள், அதிமுக கூட்டனியில் பிளவு ஏற்பட்டால், அது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக இருக்கும். மேலும் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.” என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். தனித்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்த சில தலைவர்கள், “இந்தத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டால், கட்சியின் உண்மையான வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும். தமிழகத்தின் சில இடங்களில் பாஜகவுக்கு 10 சதவீதத்துக்கு அதிகமாகவும், மற்ற இடங்களில் 5 முதல் 6 சதவீத வாக்குகளும் உள்ளன. எனவே, இதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள். என்றாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அதிமுக கூட்டணியிலேயே பாஜக நீடிக்கிறது.   

click me!