ஆரம்ப புள்ளி வைத்த நகர்ப்புற தேர்தல்..அமமுகவுடன் அதிமுக கைகோர்ப்பு..தேனியில் நடத்த புது திருப்பம்..

Published : Mar 04, 2022, 03:37 PM IST
ஆரம்ப புள்ளி வைத்த நகர்ப்புற தேர்தல்..அமமுகவுடன் அதிமுக கைகோர்ப்பு..தேனியில் நடத்த புது திருப்பம்..

சுருக்கம்

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அதிமுக ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் ஒரத்தநாடு பேரூராட்சியை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சியும் அமமுக வசம் சென்றுள்ளது.  

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம் தேதி பதவியேற்றனர். இந்நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனிடையே 20 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று திமுக வெளியிட்டது. கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் சில நகராட்சிகளில் இரண்டு பேர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பு முறையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 7 வார்டு, அமமுக 6 வார்டு, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றது. திமுக சார்பில் 2வது வார்டில் பாண்டிசெல்வி, 3வது வார்டில் செல்வராஜ், 6வது வார்டில் மணிமாறன், 7 வது வார்டில் கணேஷ்பாபு, 12வது வார்டில் மகாராஜா, 14வது வார்டில் செந்தில்குமரன், 15ல் பவானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமமுக சார்பில் 4வது வார்டில் பாண்டீஸ்வரன், 5வது வார்டில் சுந்தரவள்ளி, 8 வது வார்டில் சுகன்யா, 10ல் சந்திரா, 11ல் மிதுன் சக்கரவர்த்தி, 13ல் மலர்கொடி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் ஒன்றாவது வார்டில் தனலட்சுமி, 9 ல் லட்சுமிபிரியா ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். இங்கு பேரூராட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் திமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவியது. அதிமுக வெளிப்படையாக அமமுகவுக்கு ஆதரவு அளித்தது.

இன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அமமுகவின் வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழகத்தில் ஒரத்தநாடு பேரூராட்சியை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சியும் அமமுக வசம் சென்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!