
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம் தேதி பதவியேற்றனர். இந்நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனிடையே 20 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று திமுக வெளியிட்டது. கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் சில நகராட்சிகளில் இரண்டு பேர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பு முறையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆனால் சில இடங்களில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட திமுகவினரே எதிர்த்து போட்டியிட்டுள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டதால் சர்ச்சையை எழுந்துள்ளது. விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். தேனி, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கரூர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல் பூந்தமல்லியில் நகராட்சித்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் திமுகவினரிடையே ஏற்பட்ட மோலில் தேர்தல் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்தவர் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சேர்மன் பதவி காங்கிரஸ் கட்சிக்கு திமுக மூலம் ஒதுக்கப்பட்டது. காங். வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் இங்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சாந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
கருமத்தப்பட்டி நகராட்சித்தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். மேலும் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
பல நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கூட்டணி வேட்பாளர்களை திமுகவினர் தோற்கடித்துள்ளனர். இதுக்குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். திமுக தலைமை உத்தரவை மீறி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டதால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.