தமிழகத்தில் 3 தொகுதிகளில் டெபாசிட் காலி... ஆளுங்கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது புகார்!

By Asianet TamilFirst Published May 27, 2019, 6:39 AM IST
Highlights

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் பாமக வேட்பாளரும், திருச்சியில் தேமுதிக வேட்பாளரும் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார்கள். இந்த மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சி கூட்டணிக்கு டெபாசிட் காலியாகி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் அதிமுக கூட்டணி டெபாசிட் இழந்துள்ளதால், சரியாக தேர்தல் பணி செய்யாத மாவட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது புகார்கள் குவிந்துள்ளன.
 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி சேர்த்து 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் எல்லாமே படுதோல்வியைச் சந்திதுள்ளன. குறிப்பாக மூன்று கூட்டணி தொகுதிகளில் அக்கூட்டணி டெபாசிட் பறிபோயுள்ளது அக்கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் பாமக வேட்பாளரும், திருச்சியில் தேமுதிக வேட்பாளரும் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார்கள். இந்த மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சி கூட்டணிக்கு டெபாசிட் காலியாகி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சென்னையில் வெற்றி பெற்ற பெற்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கும் தோல்வியடைந்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கும் இடையே 3 லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளன.
இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்துக்கும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசம். திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் அக்கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.
அதிமுக ஓட்டு தங்களுக்கு கிடைக்கவேயில்லை என்று கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. அதேவேளையில் சரியாக வேலை செய்யாத கட்சி நிர்வாகிகள் மீதும் அதிமுக தலைமையில் புகார்கள் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் திமுக வாங்கிய ஓட்டுகளைக்கூட அதிமுக பெரிதாக கவலைப்படவில்லை. இரண்டு தொகுதிகளும் சென்னையிலும் சென்னையை ஒட்டியும் வருவதால், திமுக அதிக ஓட்டுகள் வாங்கியிருப்பதாக ஆளுங்கட்சி கருதுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக ஓட்டு பாமகவுக்கு வரவில்லை என்று அக்கட்சி தரப்பிலிருந்து புகார் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
திருச்சி தொகுதியில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வாக்குகளை அள்ளியுள்ளது. இதனால், இந்த இரு அமைச்சர்கள் மீதும் தலைமை மீது புகார் குவிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தேர்தலில் சரியாக வேலை செய்யாத அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலையில் ஆளுங்கட்சி இருப்பதால்,  நடவடிக்கை குறித்து எந்தத் தகவலும் அதிமுக தரப்பில் இல்லை. 

click me!