மூத்த தலைவர்கள் எல்லாம் ஒதுங்கீட்டாங்க… ராகுல் மட்டும் தனி ஆளா போராடினார் ! பிரியங்கா பகிரங்க குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published May 27, 2019, 6:29 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்  ஒதுங்கிக் கொண்டதால்  மோடிக்கு எதிராக ராகுல் நாதி தனி ஆளாக போராடினார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 
 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தோல்வி பற்றி ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 
காங்கிரசின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் அந்த பதவிக்கு வருவதை, தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். வேறு யாராவது காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாதா? என்றும் அவர் கேட்டார்.

ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு அவரை சில மூத்த தலைவர்கள் வற்புறுத்தினர். அப்போது, வேதனை கலந்த முகத்துடன் காட்சி அளித்த பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். 

பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்? மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற கோஷத்தையும் என் சகோதரர் எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள்  என்று பிரியங்கா  கடுமையாக குற்றம்சாட்டினார்.

மேலும், ராஜினாமா செய்வது, பாஜகவின்  வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும் என்று கூறி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் அவர் வலியுறுத்தினார்.

click me!