அதிமுக - பாமக கூட்டணி உறுதி.. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

By karthikeyan VFirst Published Feb 27, 2021, 7:26 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக - பாமக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டு, பாமகவிற்கு 23 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆகியவை துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் பாமகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

அதன்பின்னர், பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொகுதி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியான அதிமுகவிடம், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர்கள் கேட்ட 20% வழங்கவில்லை என்றாலும் 10.5% உள் ஒதுக்கீடு என்று சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்ததற்கு, மறுநாளான இன்று கூட்டணி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!