பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்..! தனி சின்னத்தில் போட்டியிடுவோம்- என்ன முடிவெடுக்க போகிறார் ஓபிஎஸ்.?

By Ajmal KhanFirst Published Mar 21, 2024, 2:23 PM IST
Highlights

பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை, தாமரை சின்னத்திலும் போட்டியிட நிர்பந்தனம் இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

பாஜகவில் தொடரும் இழுபறி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திற்கும் தயாராகிவிட்டது. இதே போல அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்து அறிமுக பொதுக்கூட்டத்திற்கான தேதியையும் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவானது தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் பாமகவிற்கு 10 தொகுதியும், அமமுகவிற்கு 2 தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதே போல ஜான் பாண்டியன், தேவநாதன், ஏசி சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர்களுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளது.

விரக்தியில் ஓபிஎஸ்

ஆனால் ஓபிஎஸ் அணி மற்றும் தமாகவிற்கு தொகுதி ஒதுக்க முடியாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தாமகவிற்கு 3 தொகுதிகளை ஒதுக்க  பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் தஞ்சாவூர் தொகுதியை ஓபிஎஸ் அணியும் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. இதனால் நேற்று முடிவு எடுக்க முடியாத நிலை உருவானது. இதே போல ஓபிஎஸ் அணிக்கு 2 தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும் என பாஜக கூறிவிட்டது மேலும் தேனி தொகுதியும் இல்லை, ராமநாதபுரம் இல்லையென பாஜக தெரிவித்து விட்டது.

என்ன முடிவெடுக்கபோகிறார் ஓபிஎஸ்.?

மேலும் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்துள்ளது. ஆனால் தாமரை சின்னத்தில் நிற்க முடியாது தனி சின்னம் தான் என ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது.இதனை பாஜக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் நம்மை மதிக்காத பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனி அணியாக தேர்தலை எதிர்கொள்வோம் என கூறி வருகின்றனர். எனவே ஓ.பன்னீர் செல்வம் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

இதையும் படியுங்கள்

திமுகவில் ஓரங்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன்.!அதிமுக இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்.. மாஸ் காட்டும் இபிஎஸ்

click me!