
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பிறகு, டிடிவி தினரகன் கலந்து கொண்டு முதல் கூட்டமாகும். அதேபோல் ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டமும் இதுவாகும்.
இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தொகை உயர்வு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி நீட்டிப்பு போன்ற முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று 5-வது நாளுடன் நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார். பேரவைக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெ. நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சமாதிக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.