அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியது உண்மைதான்!! ஆதாரத்துடன் அடித்து கூறும் வருமான வரித்துறை

First Published Jan 12, 2018, 3:37 PM IST
Highlights
minister vijayabaskar got bribe in gutka issue is true said IT department


குட்கா விவகாரத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அப்போதைய காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என வருமான வரித்துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றதை அடுத்து, குட்கா கிடங்கு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு டைரி சிக்கியதாகவும் அதில், குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், விசாரணை அதிகாரி ஜெயக்கொடி அண்மையில் மாற்றப்பட்டார். நேர்மையாக இந்த வழக்கை விசாரித்த அதிகாரி ஜெயக்கொடி மாற்றப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் இன்று, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முக்கியமான சில தகவல்களை வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

அதில், குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் காவல்துறை ஆணையருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மைதான். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், 56 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மாதவராவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வலுவான நடவடிக்கை எடுக்க முடியும். இதுதொடர்பாக டிஜிபிக்கு எழுதிய கடிதம், ஜெயலலிதாவின் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையிலிருந்து வருமான வரி சோதனையின் கண்டுபிடிக்கப்பட்டது என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதால்தான், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
 

click me!