அதிமுக கொடி, சின்னம் ஆகியற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்ததால் ஓபிஎஸ் தரப்பு ஏமாற்றம் அடைந்தது.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் சட்டப்போராட்டம் மேற்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருந்த போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதிமுக பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இந்த உத்தரவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு கடந்த வாரம் முறையீடு செய்தது.
அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கு பட்டியலிட்டதும் விசாரிக்கப்படும் என அறிவித்தார்.இதன் படி கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும் எதிர்பார்த்த நிலையில், வழக்கு பட்டியலிடாத காரணத்தால் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் இந்த வழக்கு பட்டியலிடவில்லை. இதனையடுத்து தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் கட்சியின் செயல்பட முடியாத நிலை உள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
சங்கரய்யாவிற்கு அரசு மரியாதையோடு இறுதி அஞ்சலி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு