அதானியின் ஒருநாள் வருவாய் ஆயிரம் கோடி…. இது யாருடைய இந்தியா – மத்திய அரசை விளாசும் கமல்ஹாசன்..!

By manimegalai aFirst Published Oct 1, 2021, 7:06 PM IST
Highlights

32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தின் கவுதம் அதானி அசுரவேக வளர்ச்சி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் ஏழைகள் மதல் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. ஆனாலும் இக்காலக்கட்டத்தில் அம்பானி, அதானியின் சொத்து மதிப்புகள் குறையாமல் நேர் மாறாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்தநிலையில், ஆசிய பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஆண்டில் கவுதம் அதானி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகையே கொரோனா ஆட்டிபடைத்தபோது அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 260 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அவர்களின் ஒருநாள் குடும்ப வருமானம் ரூ.1,002 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கவுதம் அதானி மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால், கமல்ஹாசனின் கேள்விகள் மத்திய அரசை நோக்கியே பாய்ந்திருக்கிறது.

டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!