
ரஜினி, விஜய்க்கு அடுத்து ‘அரசியலுக்கு வரும் மூடில் இருக்கும் நடிகர்கள்’ பட்டியலில் இணைந்திருப்பவர் விஷால். வெறும் ஆசையோடு மட்டும் ஏற்றிக் கொண்டு திரியாமல் அதற்கான அடிப்படை வேலைகளையும் பக்காவாகத்தான் செய்து கொண்டிருக்கிறார் மனிதர்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்று திரையுலகில் நிர்வாக ரீதியில் தன்னை அழுந்த தடம் பதித்திருக்கும் விஷால் அந்த வகையில் பணமும், செல்வாக்கும் நிறைந்த ஒரு பட்டாளத்தை தனக்கென உருவாகி வைத்துள்ளார். இந்த முன் ஏற்பாடுகளுடன் மெதுவாக பொது வெளிகளிலும் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகள் செய்கிறார். இதைக்கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் கடந்த வாரம் பெங்களூருவில் நடந்த திரைப்பட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விஷால் ‘தமிழகம் காய்ந்து கிடக்கிறது. தயவு செய்து தண்ணீர் கொடுங்கள். முதலில் நாம் இந்தியர்கள் அதன் பிறகுதான் கன்னடர், தமிழர் என்பதெல்லாம்.’ என்று நறுக்கென்று அரசியல் கலந்த பொது பிரச்னையை பேசிவிட்டு வந்தார். விஷாலின் இந்த மூவ்வை ‘ஆம்பள’த்தனமாக கொண்டாடுகிறது சினிமா மற்றும் பொது விமர்சக வட்டாரம். காரணம், பொதுவாகவே பெங்களூரு ஒரு சென்ச்டீவ் மண். அம்மாநில நலனை தாண்டி எதையும் பேசினால் பேய்க் கலவரம் கிளம்பிவிடும்.
அதிலும் தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்கிற நியாயத்தையெல்லாம் பெங்களூரு மண்ணில் பேசிவிட்டு வாட்டாள் நாகராஜ் போன்ற களேபர பேர்வழிகளை தாண்டி வெளியே வந்துவிட முடியாது. ஆனால் விஷால் அதையும் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியை தமிழக விவசாயிகளின் போராட்டம் புரட்டியெடுத்தபோது பிரகாஷ்ராஜ், பாண்டிராஜ் போன்றோரை அழைத்துக் கொண்டு போய் விவசாயிகளுக்கு தோள் கொடுத்தார்.
ஆக அரசியல் தலைவனாக உருவெடுப்பதற்கான சத்ரியத்தனங்கள் மட்டுமில்லாமல் சாணக்கியத்தனத்தையும் வெகுவாகவே கற்று வைத்திருக்கிறார் விஷால். இதற்கும் திரையுலக விவகாரத்திலேயே பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் விஷால்.
அதாவது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் தியேட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கண்டித்து நாளை முதல் திரையரங்குகளை மூடும் போராட்டத்தை துவக்கியுள்ளனர் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர். இதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் ஆதரவையும் கோரினார்கள் அவர்கள்.
ஆனால் ‘ஆதரவு இல்லை’ என்று அல்வா கொடுத்துவிட்டார் விஷால். காரணம், இதே போன்று திரையுலக பிரச்னைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ‘தியேட்டர்கள் ஸ்டிரைக்’ எனும் போராட்டத்தை அறிவித்தார் விஷால். ஆனால் ‘எங்கள் தியேட்டரை மூடச்சொல்ல இவர் யார்? இப்போதான் பாகுபலியை ரிலீஸ் செய்து மகிழ்ச்சியான வசூலை கண்டுகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் பெரிய ஹீரோ படங்களை திரையிட்டு தொடர் தோல்விகளை கண்ட எங்களின் கல்லாக்கள் இப்போதுதான் கரன்ஸியை பார்க்கின்றன. எனவே தியேட்டரை மூட முடியாது.” என்று சொல்லி விஷாலை விமர்சித்து தள்ளினார்கள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர். ஆதரவில்லாமல் போனதால் அந்த ஸ்டிரைக்கை அப்போதைக்கு கைவிடுவதாக சொல்லிய விஷால், திரையுலக பொது நன்மைக்காக குரல் கொடுத்த தன்னை தியேட்டர் உரிமையாளர்கள் பாகுபலி வசூல் தரும் திமிரில் அவமானப்படுத்திவிட்டனர் என்று பொங்கினார்.
இந்த நிலையில்தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக ஸ்டிரைக்கை துவங்கியிருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தண்ணி காட்டுகிறார் விஷால்.
“தன்னிச்சையாக தியேட்டர்கள் மூடல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவை எடுக்கும் முன் அனைத்து தயாரிப்பாளர்களின் நிலையையும் உணர்ந்திருக்க வேண்டும். 20 தயாரிப்பாளர்களை முற்றிலும் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படாது. மாநில அரசுக்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்.” என்று கெத்தாக ஒரு அறிக்கையை தட்டியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவு தங்கள் ஸ்டிரைக்கிற்கு இல்லாமல் போனதை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் வெறுப்பாய்தான் பார்க்கிறது. ‘நேரம் பார்த்து பழிவாங்கிவிட்டார் விஷால்.’ என்று புழுங்குகிறார்கள் அவர்கள்.
திரையுலகின் இரு முக்கிய துறைகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த முட்டலும், மோதலும் திரையுலகின் வளர்ச்சிக்கு செம்ம சவாலாக உருவெடுக்கிறது என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை.
இது ஒரு புறமிருந்தாலும் விஷாலின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளும், செயல்பாடுகளும் ஆச்சரியப்பட வைக்கிறது!