
நடிகர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்ததாக கூறி விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தள்ளுபடி செய்தார்,
இதனால் ஆத்திரமடைந்த விஷால் மற்றும் அவரது ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து முறையீடு செய்த விஷால், தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
பின்னர் நடிகர் விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பல்வேறு வாதத்திற்கு பின்னர் அவரது வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டதாக இரவு 8.30 மணியளவில் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால், தேர்தலில் நிற்பதற்கு எதிர்ப்பு இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என கூறினார். நீதி வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர் தேர்தல் ஆணையத்துக்கு நன்றியும் கூறினார்.
ஆனால் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக திடீரென தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதாவது விஷால் சார்பில் முன்மொழிந்த 10 பேரில் 2 பேர் நேரில் வந்து தாங்கள் முன்மொழியவில்லை என தெரிவித்தால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல நடத்தும் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் அறிவிப்பால் விஷாலும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொடுத்த மகிழ்ச்சியை கொஞ்ச நேரத்தில் தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டதே என அவரது ரசிகர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.