
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சமவாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. பா.ஜனதாவின் வாக்குகள் 16 சதவீதம் குறைந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் வருகிற 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கருத்து கணிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நீடித்து வருகிறது.
இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து ‘லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் - ஏ.பி.பி’ நிறுவனங்கள் சார்பில் இறுதி கட்ட கருத்து கணிப்பு சமீபத்தில் நடந்தது.
16 சதவீதம் குறைந்தது
இந்த கருத்துக்கணிப்புகளின் படி பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 43 சதவிகித வாக்குகளைப் பெற்று சமநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 16 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
59-ல் இருந்து 43 சதவீதம்
அதாவது இதே அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 59 சதவிகித வாக்குகள் பெறும் என்றும், நவம்பர் இறுதி வாரத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் 43 சதவிகித வாக்குகள் பெறும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது முக்கியமான காலகட்டம். கடந்த ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 29 சதவிகித வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது.
14 சதவீதம் உயர்வு
நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி அக்கட்சியின் வாக்குகள் 14 சதவிகிதம் உயர்ந்து 43 சதவிகிதமாக உள்ளது.
எனவே பாஜகவும், காங்கிரசும் சமமான வாக்குகள் பெறும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
பெண்கள் வாக்குகள்
குறிப்பாக, இம்முறை பெண்களுடைய வாக்குகள், காங்கிரசுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முந்தைய கணிப்புகளின் படி, பாஜகவுக்கான பெண் வாக்காளர்களின் ஆதரவு 50 சதவிகிதமாகவும், காங்கிரசுக்கான ஆதரவு 39 சதவிகிதமாக இருந்தது.
ஆனால், நவம்பர் மாத கருத்துக்கணிப்புகளின் படி, பாஜகவுக்கான ஆதரவு 42 சதவிகிதமாகவும், காங்கிரசுக்கான பெண்களின் ஆதரவு 44 சதவிகிதமாகவும் மாறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
50 தொகுதிகளில்...
லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் - ஏ.பி.பி செய்திகள் நடத்திய இந்த கருத்துக்கணிப்புகள் கடந்த நவம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை, 50 தொகுதிகளில் உள்ள 200 வாக்கு மையங்களில் 3,655 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளால் ஓட்டுப் பதிவின்போது தாக்கம் ஏற்படுவதை தடுப்பதற்காக இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இதனால், ‘கருத்து கணிப்பு’ என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘ஆய்வு’ (சர்வே) என்பது போன்ற மாற்று வார்த்தைகளை பயன்படுத்தி இதுபோன்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
மோடியின் செல்வாக்கும் வீழ்ச்சி
மேலும் ஆகஸ்ட் மாத கருத்துக் கணிப்புடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடியின் செல்வாக்கு 82 சதவீதத்திலிருந்து 18 புள்ளிகள் குறைந்து 64 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
ராகுல் காந்தியின் புகழ் 40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த மிகப்பெரிய மாற்றம் முக்கியமாக குஜராத்தின் வியாபார சமூகத்தாலேயே நிகழ்ந்துள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.