நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல் முறையீடு.!

By Asianet TamilFirst Published Jul 18, 2021, 9:32 PM IST
Highlights

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
 

நடிகர் விஜய் 2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு விதிக்கும்  நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 
நீதிபதி தனது தீர்ப்பில், “அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். நடிகர்கள் முறையாக சரியான நேரத்தில் வரி செலுத்தி உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்வார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
 அவர் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அதனால் தானும் விலக்கு கோரினேன். இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது. எனவே,  வரி விலக்கு கோரியதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!