பாஜகவினர் பிரிவினைவாதத்தை ஏன் கையில் எடுக்குறாங்க தெரியுமா..? திமுக எம்.பி. சொன்ன விளக்கம்.!

By Asianet TamilFirst Published Jul 18, 2021, 9:14 PM IST
Highlights

பாஜகவினரின் அரசியல் அணுகுமுறை தமிழ்நாட்டில் எடுபடாது என்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
 

அதியமான்கோட்டையில் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான கணக்கில் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை அமைச்சர், அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து நிதி ஒதுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த ரயில் பாதைத் திட்டத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் தருமபுரி நகர்ப் பகுதி இருக்கிறது. இந்தப் பகுதியில் கட்டிடங்களும் வீடுகளும் இருப்பதால் மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக குழு அமைத்து நிலத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கும். மொரப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே ரயில் பாதை அமைக்க அளவீட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. அடுத்தடுத்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தொடர்ந்து துறை அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்துவேன். விரைவில் தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில்பாதை தொடங்கப்படும்.
தமிழகத்தில் பாஜகவினர் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற நிலை வரும்போதெல்லாம், ஏதாவது பிரிவினை வாதத்தை கையில் எடுப்பார்கள். அதன்மூலம் சிறுசிறு இலக்கை வைத்து செயல்பட முயல்கிகிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் கொங்குநாடு விவகாரம். பாஜகவினரின் இந்த அரசியல் அணுகுமுறை தமிழ்நாட்டில் எடுபடாது, அவர்களால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது.” என்று செந்தில்குமார் தெரிவித்தார். 

click me!