லிட்டர் பெட்ரோலுக்கு தமிழக அரசுக்கு ரூ.27.75 கிடைக்குது.. ரூ.5 குறைத்தால் என்ன? மாஜி அமைச்சர் கேள்வி!

By Asianet TamilFirst Published Jul 18, 2021, 9:02 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது விலையக் குறைக்கத் தயங்குவது ஏன் என்று திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசுகையில், “அதிமுக அரசை அடிமை அரசு என அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் 21 நாட்கள் முடக்கினர். இப்படி மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம்.
பெட்ரோல், டீசல் வரியில் பிஹாரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.71 சதவீதம், டீசலுக்கு 18.34 சதவீதம்; டெல்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதம், டீசலுக்கு 17.24 சதவீதம்; கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 சதவீதம், டீசலுக்கு 18.88 சதவீதமும்; குஜராத்தில் பெட்ரோலுக்கு 25.45 சதவீதம், டீசலுக்கு 25.55 சதவீதம்; மேற்கு வங்கத்தில் பெட்ரோலுக்கு 25.25 சதவீதம், டீசலுக்கு 17.54 சதவீதம்; உத்தரபிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 சதவீதம், டீசலுக்கு 16.84 சகவீமும்; உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 சதவீதம், டீசலுக்கு 16.82 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.27.75, டீசலுக்கு ரூ.20.35 தமிழக அரசுக்கு கிடைக்கிறது. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 75 நாட்கள் ஆகியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விலையைக் குறைக்க வேண்டும். வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது விலையைக் குறைக்க தயங்குவது ஏன்” என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
 

click me!