
அப்பா அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னேன்; அழைப்பாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் பிறந்ததில் இருந்தே அரசியலில்தான் இருக்கிறேன். திமுக சீட் தந்தால் தேர்தலில் போட்டியிட தயார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்கு சேகரித்ததாக கூறியிருந்தார்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு, அரசியலில் இருந்து சற்று விலகி இருந்ததாக கூறிய உதயநிதி, தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக கூறினார்.
இந்த நிலையில், சென்னை, ஆலந்தூரில், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், திமுக சீட் தந்தால் தேர்தலில் நிற்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தெரியாது. உங்கள் யூகங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்று கேட்டேன். மீண்டும் மீண்டும் அந்த கேள்வி கேட்கப்படுகிறது. திமுக சீட் தந்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதே என் பதில் என்றார்.
அப்பா அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னேன். அழைப்பாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். திமுக செயல் தலைவராகவும், எதிர்கட்சி தலைவராகவும் ஸ்டாலின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன். நான் பிறந்ததில் இருந்தே அரசியலில்தான் இருக்கிறேன். எனக்கு அரசியல் குறித்து பேச வேண்டும் என்று தோன்றும்போது மட்டும் பேசுகிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.