
தெலுங்கு பட நடிகர் பாலகிருஷ்ணா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நாற்காலியில் அமர்ந்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. இதில் அவரது மைத்துனரும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா இந்துபூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரசிகர்களை அடித்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் பாலகிருஷ்ணா, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்துபூரில் வருகிற மார்ச் மாதம் நடக்கும் லேபக்ஷி உற்சவம் நிகழ்ச்சி தொடர்பாக விஜயவாடாவில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் பாலகிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நாற்காலியில் அமர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது அங்கிருந்த அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மைத்துனர் என்பதால், ஈரும் பெரிதாக என்ன எதுன்னு கேட்காமலேயே கூட்டத்தில் பேசாமல் இருந்துள்ளனர். பொதுவாக, எம்எல்ஏக்கள் இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை வேறு அறைகளில்தான் நடத்துவர். ஆனால், பாலகிருஷ்ணாவோ முதல்வர் அறையில், அமைச்சர்களுடன் அதுவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கையில் அமர்ந்தபடியே நடத்தியுள்ளார்.
முதல்வர் நாற்காலியில், ஒரு எம்எல்ஏவான பாலகிருஷ்ணா அமர்ந்திருந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளார்.