
மெர்சல் திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனையை படக்குழுவினர் சிறப்பாக கையாண்டுள்ளதாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் ரஜினி தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது.
தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வந்தாலும் சில இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெர்சல் படப்பிரச்சனையில் கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிக்கு வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்து வந்தது.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் குறித்து பேசமாட்டார் எனவும் அவர் போர் வரும்போது மட்டுமே பேசுவார் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மெர்சல் திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனையை படக்குழுவினர் சிறப்பாக கையாண்டுள்ளதாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் ரஜினி தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ரஜினியை விமர்சித்தவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி என வளைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.