சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்... குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினி ஆறுதல்!

By Asianet TamilFirst Published Jun 28, 2020, 8:37 PM IST
Highlights

இந்தச் சம்பவத்துக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கோலிவுட் நடிகர்களைத் தாண்டி பாலிவுட் நடிகர்களும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் வளர்ந்துவரும் திரைப்பிரபலங்கள்கூட இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எதுவும் தெரிவிக்காததை சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
 
தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன் மரணமடைந்த குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கோலிவுட் நடிகர்களைத் தாண்டி பாலிவுட் நடிகர்களும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் வளர்ந்துவரும் திரைப்பிரபலங்கள்கூட இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எதுவும் தெரிவிக்காததை சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை ரஜினி ஆதரவாளர் தியாகராஜன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

click me!