
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் அக்.7-ல் நடைபெற உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை விமர்சித்ததாக செய்திகள் வெளியானது.
அதாவது, கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும் இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்ததாக வெளியானது.
மேலும் தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இதற்கு பாஜகவின் எஸ்வி சேகர் தாராளமாக பிரகாஷ்ராஜ் விருதுகளை திருப்பி தரலாம் என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், தகுதி இல்லையென்று நினைத்தால் தேசிய விருதுகளை திருப்பி தரலாம் எனவும்தன்னை பிரபல படுத்தி கொள்ளவே பிரகாஷ்ராஜ் அவ்வாறு தெரிவித்துள்ளாதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரகாஷ்ராஜ் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் குடிமகனான தன்னை பிரதமரின் மவுனம் காயப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தான் தேசிய விருதுகளை திரும்பி தருவதாக சொல்லவில்லை என்றும் தேசிய விருதுகள் பெற்றதை பெருமையாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் அக்.7-ல் நடைபெற உள்ளது.