கமலின் அரசியல் வியூகங்கள்..! கைகொடுக்குமா? கவிழ்த்துவிடுமா?

First Published Oct 4, 2017, 4:40 PM IST
Highlights
kamal politics


அண்மைக்காலமாக கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்து வருகிறது. ரஜினியும் அரசியல் குறித்து மறைமுகமாக பேசினாலும், கமல் நேரடியாக தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார்.

தான் கட்சி தொடங்க இருப்பதாகவும் முதல்வராகும் ஆசை இருப்பதாகவும் வெளிப்படையாகவே கமல் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து கமல் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார்? என்ற எதிர்பார்ப்பு கமல் ரசிகர்களிடமும் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளிலிருந்து கமல் சிறந்த மாற்றாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசியல் பிரவேசம் குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். கமல் அரசியல் பிரவேசமெடுக்கும் இந்த நேரத்தில் சில விஷயங்களைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

தற்போது தமிழகத்திற்கு அரசியல் மாற்றம்தான் தேவை என அன்புமணி, சீமான் போன்றோர் பல்வேறு திட்டங்களுடன் முதல்வராகி மக்கள் பணியாற்ற தீவிரமாக போராடி வருகின்றனர். தெளிவான செயல் திட்டங்களுடன் மக்களை அணுகிய அவர்களே மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்நிலையில், கமலும் அரசியலுக்கு வருவதால் கமலை மக்கள் ஏற்பார்களா? அவர் எந்த மாதிரி செயல்பட்டால் அவரை ஏற்பார்கள்? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

சினிமா மூலம் பிரபலம், மக்களுக்கு கமலின் முகம் தெரியும். ஆனால் இவைமட்டுமே அரசியலில் வெற்றிபெற உதவாது. அதைத்தாண்டி கொள்கை ரீதியாகவும் மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வும் அதற்கான திட்டங்களும் கமலிடம் இருக்கிறதா? என்பதை உற்றுநோக்கும் அளவிற்கு இளைய வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.

இதுவரை கொள்கை ரீதியாக கமல் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என கமல் தெரிவித்திருந்தார். கமலின் இந்த கூற்று, மத்திய பாஜக அரசால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களால் ரசிக்கப்படுமா? என்றால்.. சந்தேகம்தான்.

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி திணிப்பு என பல்வேறு வகைகளில் தமிழக மக்கள் மத்திய பாஜக அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாநில அரசை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைத் தவிர மத்திய அரசை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆட்சேபனை இல்லை என கமல் தெரிவித்திருப்பது மக்களிடையே ஆதரவை பெற உதவுமா? என்பது ஒரு கேள்வி.

அரசியலில் தீண்டாமை இல்லை என கமல் தெரிவித்திருந்த கருத்து வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், கொள்கை, மக்களின் நலன்கள், பிரச்னைகள் ஆகியவை தொடர்பாக கட்சிகளுக்குள் தீண்டாமை இருக்கத்தான் செய்யும்.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமலிடம் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஊழலை ஒழிக்க வேண்டும் எனவும் அரசியல்வாதிகளுக்கு மெத்தனம் கூடி விட்டது, பயம் போய்விட்டது. இந்த அடிப்படையில் கொள்கை குறிப்புகள் உருவாக்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் இருக்கும் பிரச்னைகள் விரல்விட்டு எண்ணிவிட முடியாது. அந்த அளவிற்கான பிரச்னைகளை அனைத்து தரப்பினரும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊழலுக்கு எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கையை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் அனைத்து பிரச்னைகளின் ஆணிவேரை ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுகளுடன் மக்களை அணுகினால் மட்டுமே கமல் ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் படுவார். இல்லையென்றால் கஷ்டம் தான்...

பொறுத்திருந்து பார்ப்போம்.. கமல் என்ன செய்கிறார்னு..
 

click me!