நீட் தேர்வுக்காக வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் வந்த சோதனை எனவும், அரசுக்கு நாங்கள் பாடம் கற்றுக்கொடுப்போம் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 720-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன், நீட் தேர்வுக்காக வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் வந்த சோதனை எனவும், அரசுக்கு நாங்கள் பாடம் கற்றுக்கொடுப்போம் எனவும் தெரிவித்தார். மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் கிடைக்க அனைவரும் போராட வேண்டும் எனவும், தமிழகத்தின் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டார். மாணவி தற்கொலை போன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது எனவும், சாதி கட்சி கடந்து நியாயத்திற்காக போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.