எடப்பாடி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியபோது உட்கட்சி விவகாரம் என ஆளுநர் சொல்வது சரியல்ல என திமுக எம்.பிக்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் கூட்டாக பேட்டி அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட அதிமுக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அப்போது பொது செயலாளர், துணை பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்கள் என்றும் அதற்காக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதனால் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் எதிர் அணியினர் ஈடுபடுவதை தவிர்க்க டிடிவி அவர்களை புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எடப்பாடி அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினர். ஆனால், ஆளுநரோ, 19 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருத முடியாது என்றும், ஒரு கட்சி இரண்டு குழுக்களாக செயல்படுவதால் சட்டப்படி தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி திமுக எம்.பிக்கள் டி.கே.எஸ் இளங்கோவன், கனிமொழி,திருச்சி சிவா மற்றும் கூட்டணி எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதி, சீத்தாரம் யெச்சூரி, டி.ராஜா, , ஆனந்த் சர்மா ஆகியோர் ஜனாதிபதி ராம்நாந்த் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து திமுக எம்.பிக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எடப்பாடி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியபோது உட்கட்சி விவகாரம் என ஆளுநர் சொல்வது சரியல்ல எனவும் ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ஜனாதிபதி தகுந்த நேரம் கேட்டுள்ளார் எனவும் இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தனர்.