“அவசியம் இதை செய்வேன்”... ஆபரேசன் செய்ய ஆயுதம் எடுக்கும் செயல் தல!

First Published Jan 23, 2018, 7:36 PM IST
Highlights
Active chief MK Stalin Action Against party Administrators


திமுகவின் வளர்ச்சிக்காக விரைவில் கட்சியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்; என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

“அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ, அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன் பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சுயமரியாதையையும், சமூக நீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறகடித்துக்கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், “ தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரை தேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பிவந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திமுக சிறகடித்துக்கொண்டே இருக்கிறது” 

அண்ணா - கலைஞர் வழியில்

ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன - மொழி பாதுகாப்புக்காகவும் திமுக பாடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “தமிழகத்தை இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டிய பேரறிஞர் அண்ணா - கலைஞர் வழியில், கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு தவறாமல், திமுகவை அதே வலிவோடும் பொலிவோடும் வீறுநடை போட்டு வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பினை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டு, அதை நிறைவேற்றிட வேண்டும்.

தமிழகத்தில் தரங்கெட்டதோர் ஆட்சி, மாநிலத்தின் நலன்களைச் சிதைத்து, சீரழித்துவருகிறது. அந்தக் கேடுகெட்ட ஆட்சியை ஏன் கீழே இறக்காமல் இருக்கிறீர்கள் என்று திமுகவைப் பார்த்துப் பொதுமக்கள் நாள்தோறும் கேள்விக்கணை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே என்பதைப் போல, எல்லாருடைய கண்ணும் கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன. நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. ஜனநாயக நெறி அடர்ந்தது. அதில் கற்களும் முட்களும் தடை ஏற்படுத்தும்போது, அவற்றை அகற்றியெறிய வேண்டிய மராமத்துப் பணியை நாம் மேற்கொண்டாக வேண்டும்.

ஜனநாயகப் பாதையில்

மேலும், திமுகவின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன; அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்த மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக்கொள்வதற்காகவே, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கள ஆய்வு திட்டம் உள்ளது.

களஆய்வு

திமுகவை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “பிப்ரவரி 1ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், திமுகவின் ஆணிவேருக்கு முறையாக நீர்ப்பாய்ச்சி, உரமூட்டுவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்.

அறுவை சிகிச்சை

நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ, பேச்சு மூலமாகவோ தெரியப்படுத்தலாம் என்று கூறியுள்ள ஸ்டாலின், “கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்.

போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக இந்தக் கள ஆய்வு அமையட்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

click me!