ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. முடக்கப்படுகிறது இரட்டை இலை சின்னம்? அதிர்ச்சியில் இபிஎஸ்?

By vinoth kumarFirst Published Jan 21, 2023, 9:57 AM IST
Highlights

இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம். பாஜக தேசிய கட்சியாக இருப்பதால் அவர்கள் போட்டியிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்கும். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என  ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என கூறி எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளார். 

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்..!

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு ழுழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். 2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்பதற்கு முழு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு என்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான். 

இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம். பாஜக தேசிய கட்சியாக இருப்பதால் அவர்கள் போட்டியிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்கும். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். 

நாளை மறுநாள் நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம். இபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை இபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியா? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். சசிகலா தரப்பில் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை. அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிமுக சின்னத்தில் போட்டியிடுவோம் என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டா போட்டிக்கொண்டு கூறியுள்ளதை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி சின்னத்தில் போட்டியிட வாய்பே அதிகம் என கூறப்படுகிறது.

click me!