லிட்டருக்கு 15 ரூபாய் வரை உயரப் போகுது பால் விலை ! வேலூர் தேர்தலுக்காக வெயிட்டிங் !!

By Selvanayagam PFirst Published Aug 2, 2019, 9:30 PM IST
Highlights

தமிழகத்தில் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வேலூர் தொகுதி தேர்தல் முடிந்தவுடன் பால் விலை உயர்வு அறிவிப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் தரமாகவும், சுவையாகவும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் பால் விலை கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பால் விலையி லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார்.

அதன் பின்னர்  கடந்த 5 ஆண்டுகளாக  பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் உடனடியாக ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து  பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

பால் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ27-ல் இருந்து ரூ.42 ஆக 15 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.29-ல் இருந்து ரூ.50 ஆக 21 ரூபாய் உயர்த்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வு ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வேலூர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பததால் தேர்தல் முடிந்த பின்னர் விலை உயர்வு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆவின் பால் விலை உயர்த்தும்போது, தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

click me!